பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி


பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி
x
தினத்தந்தி 1 March 2022 2:37 AM IST (Updated: 1 March 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயிலால் தஞ்சை பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்;
சுட்டெரிக்கும் வெயிலால், தஞ்சை பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கோவில் வளாகத்தில் உடனடியாக தரைவிரிப்புகளை விரிக்க வேண்டும்  என்று எதிர்பார்த்து உள்ளனர். 
தஞ்சை பெரியகோவில்
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. 
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் இந்த கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தரை விரிப்புகள்
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகன், கருவூரார், நடராஜர், மகா நந்திெயம்பெருமான் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. 
கோடை காலத்தில் பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் ராஜராஜன் கோபுரத்தின் அருகே இருந்து பெருவுடையார் சன்னதிவரை தரைவிரிப்புகள் விரிக்கப்படும். அந்த தரை விரிப்புகள் சூடாகாமல் இருப்பதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அதன்மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும். 
பக்தர்கள் அவதி
தஞ்சையில் தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் பெரியகோவிலுக்கு உள்ளே தரையில் வெறுங்காலில் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 
கோவிலுக்குள் இன்னும் தரைவிரிப்புகள் விரிக்கப்படாததால் சூடு தாங்க முடியாமல் பக்தர்கள் நடந்து செல்வதற்கு பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகி்ன்றனர்.  இதனால் பக்தர்கள் சூடு தாங்காமல் கோவில் வளாகத்திற்குள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர். சிலர் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அழைத்துச்செல்லும்போது மிகவும் சிரமப்பட்டவாறே அழைத்து செல்கிறார்கள்.
எதிர்பார்ப்பு
எனவே பக்தர்களின் சிரமத்தை போக்க கோவில் நிர்வாகம் உடனடியாக தரைவிரிப்புகளை விரிக்க வேண்டும். அந்த விரிப்புகளின் மீது காலை, மாலை நேரங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும்.
பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story