உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்கு குழிகளில் தவிக்கிறோம்
உக்ரைனில் உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்கு குழிகளில் தவித்து வருதாகவும், விரைவில் மீட்க வேண்டுமென்று மத்திய-மாநில அரசுகளுக்கு மார்த்தாண்டம் மாணவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழித்துறை:
உக்ரைனில் உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்கு குழிகளில் தவித்து வருதாகவும், விரைவில் மீட்க வேண்டுமென்று மத்திய-மாநில அரசுகளுக்கு மார்த்தாண்டம் மாணவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போர்
உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி போலந்து, ருமேனியா, அங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவர்களை மீட்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை அழைத்து வந்த வண்ணம் உள்ளது.
மார்த்தாண்டம் மாணவர்
இந்த நிலையில் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கீழ்விளையை சேர்ந்த ஜெயின்ஸ் என்ற மருத்துவ மாணவர் உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ளார்.
அவர் உக்ரைனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வருகிறார். அவருடன் கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த அஜ்மல் சலீம் அலி, நாகர்கோவிலை சேர்ந்த பபின், களியக்காவிளை அருகே கோணசேரியை சேர்ந்த ஸ்டெனிபர் ஜான் ஆகிய மாணவர்களும் தங்கியுள்ளனர்.
உருக்கமான தகவல்
இந்தநிலையில் ஜெயின்ஸ் நட்டாலம் கீழ்விளையில் உள்ள தனது அண்ணன் ஜின்னிசுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் தழுதழுத்த குரலில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் தங்கியிருக்கும் பகுதியை சுற்றிலும் போர் நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் எப்போதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. நாங்கள் எப்போதும் அச்ச உணர்வோடு தான் இருக்கின்றோம். குண்டு வீச்சுகளால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், நாங்கள் பஸ்களிலோ, வேறு வாகனங்களிலோ தப்பிச்செல்ல முடியவில்லை.
ஒரு வேளை உணவு
நாங்கள் போர் தொடங்கியது முதல் இங்குள்ள பதுங்கு குழிகளில் தான் தஞ்சமடைந்து உயிர் பிழைத்து வருகிறோம். பதுங்கு குழிகளில் அமர்வதற்கு கூட வசதி இல்லை. எப்போதும் நிற்கத்தான் வேண்டும். குடிக்க தண்ணீரும், உணவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
நாங்கள் 3 நாட்களுக்கு உணவு வாங்கி இருப்பு வைத்திருந்தோம். அவற்றை ஒரு நாளைக்கு ஒருவேளை அல்லது 2 வேளை என்றுதான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது கிடைக்கும் பிஸ்கெட்டைத்தான் உண்டு வருகிறோம். கடைகளில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
1500 கிலோ மீட்டர்...
நாங்கள் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து போலந்து, அங்கேரி, ருமேனியா நாடுகளுக்கு தப்பி செல்வது என்றால் சுமார் 1500கி.மீ. தொலைவுக்கு செல்ல வேண்டும். அதனால் அங்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.
ஆனால், ரஷியா சுமார் 40 கி.மீ. தொலைவில் தான் உள்ளது. இந்தியாவுக்கு ரஷியா நட்பு நாடு என்பதால் எங்களுக்கு ரஷியாவுக்கு செல்ல இந்திய அரசு பேசி அதற்குரிய அனுமதியைப் பெற்று தந்தால் நன்றாக இருக்கும். கார்கிவில் இந்தியர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 200 மாணவ-மாணவிகள் நாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் உள்ளனர்.
விரைந்து மீட்க வேண்டும்
இந்திய அரசின் வெளியுறவுத்துறை எங்களிடம் தற்போது தங்கியுள்ள இடத்திலேயே பத்திரமாக இருக்குமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் இங்கு உணவும், தண்ணீரும் இல்லாமல் ெவடிகுண்டு சத்தங்களுக்கு இடையே நடுக்கத்துடன் உள்ளோம். இந்திய அரசு எங்களை விரைந்து மீட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு ஜெயின்ஸ் தெரிவித்துள்ளதாக அவரது அண்ணன் ஜின்னிஸ் கூறினார்.
மேலும், தனது சகோதரரையும், அவருடன் தங்கி இருப்பவர்களையும் உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜின்னிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story