சிவாலய ஓட்டம் தொடங்கியது


சிவாலய ஓட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 1 March 2022 4:30 AM IST (Updated: 1 March 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் தமிழக, கேரளாவை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள்.

கருங்கல்:
குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் தமிழக, கேரளாவை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள்.
சிவாலய ஓட்டம்
நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவராத்திரி விழா நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் இங்குள்ள 12 சிவாலயங்களை ஓட்டமும், நடையுமாக சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது.
சிவாலய ஓட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பலவிதமாக புராண கதைகள் நிலவி வருகின்றன. சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவபெருமானிடம் வரம் பெற்று பின்னர், அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க முயலும் போது சிவபெருமான் ‘கோபாலா... கோவிந்தா...’ என்று அழைத்தவாறு ஓடியதாகவும், இறுதியில் விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து சூண்டோதரனை அழித்ததாகவும் சொல்லப்படுவது உண்டு.
12 திருத்தலங்கள்
இதுதவிர திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் தல புராணம்  சிவாலய ஓட்டத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அரக்கனான கேசனை மகாவிஷ்ணு ஆதிசேடனால் சுற்றி வளைத்து வீழ்த்திய போது கேசன் தனது நெடிய 12 கைகளினால் மனித உயிர்களை வதம் செய்ய முயற்சித்தான். அப்போது அதனைத் தடுக்கும் வகையில் சிவ பக்தனான கேசனின் 12 கைகளிலும் 12 சிவலிங்கங்களைக் கொடுத்தாகவும், அதனால் கேசன் அடங்கியதாகவும் கூறப்படுகிறது. 
புராணத்தின் படியே திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை மையமாகக் கொண்டு 12 சிவாலயத் திருத்தலங்களும் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
ஓட்டம் தொடங்கியது
அதைத்தொடர்ந்து பக்தர்கள் ஆண்டு தோறும் சிவாலய ஓட்டமாக ஓடுகின்றனர் அதன்படி சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் ஏகாதசியன்று விரதத்தை தொடங்கினார்கள். அன்றிலிருந்து சிவராத்திரி வரை ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டனர். 
சிவாலய ஓட்டம் நேற்று மாலை முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது. பின்னர் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை சிவன் கோவில் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சாமிகோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை் வந்து அடைகிறார்கள்.
சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் காவி உடை அணிந்து கையில் விசிறியுடன், துணிப்பையில் காசுகளுடன் கூடிய பணமுடிச்சுடன், ‘கோவிந்தா... கோபாலா... என்ற திருநாமத்தை கூறி ஓடினார்கள். வழிநெடுகிலும் அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
இந்த ஓட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று கார், இருசக்கர வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள் ஏராளமான பக்தர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்பதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

Next Story