ஊட்டியில் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
ஊட்டியில் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஊட்டி
ஊட்டியில் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காசி விஸ்வநாதர் கோவில்
ஊட்டி காந்தல் பகுதியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கடந்த 27-ந் தேதி மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மகா பிரதோஷம் நடந்தது. காசி விசுவநாதர் கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விசாலாட்சி அம்மன் உடனமர் காசி விஸ்வநாத சுவாமிக்கு நான்கு கால பூஜை, சிறப்பு யாக பூஜை, மகா அபிஷேகம் நடந்தது. காசி விஸ்வநாதர் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவராத்திரி விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா சிவராத்திரியை ஒட்டி ஊட்டியில் பிரம்ம குமாரிகள் முக்கிய வீதிகளில் அமைதி ஊர்வலமாக சென்றனர்.
கோத்தகிரி
சிவராத்திரியையொட்டி கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் உள்ள கேதாரீஸ்வரர் சந்நிதியில் நேற்று மாலை 6 மணிக்கு விநாயகர் வேள்வி மற்றும் 108 சங்கு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு முதற்கால வழிபாடு, இரவு 11 மணிக்கு இரண்டாம் கால வழிபாடு, நள்ளிரவு 2 மணிக்கு மூன்றாம் கால வழிபாடு, அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால வேள்வி மற்றும் 108 சங்கு சிறப்பு பூஜை, அதிகாலை 5 மணிக்கு4-ம் கால வழிபாடு ஆகியவை நடைபெற்றன. இந்த பூஜையில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கோத்தகிரி சக்தி மலை சிவன் கோவில், திம்பட்டி, கடக்கோடு மற்றும் கெட்சிகட்டி கிராமத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கோவில்களில் நடைபெற்ற 4 கால பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றும், இரவு முழுவதும் விழித்திருந்து பஜனைப் பாடல்களைப் பாடியும், சிவபெருமானை வழிபட்டனர். பூஜைகளில் பங்கேற்ற பக்தர்களுக்கு இரவு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story