தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
போக்குவரத்துக்கு இடையூறு
கோத்தகிரி புயல் நிவாரண கூடம் முதல் தாசில்தார் அலுவலகம் செல்லும் குறுகிய சாலையோரத்தில் ஏராளமான 4 சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே இந்த சாலை வழியாக பள்ளிக்கு செல்வோர், கோர்ட்டு, தாசில்தார் அலுவலகம், கருவூலம், போலீஸ் நிலையத்திற்கு வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரங்கநாதன், கோத்தகிரி.
மின்கம்பம் அகற்றப்படுமா?
பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் அரசு ஆஸ்பத்திரி அருகில் நடுரோட்டில் மின் கம்பம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரி களிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் நடுரோட்டில் கம்பம் உள்ளதால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித், கோட்டூர்.
மாணவ-மாணவிகள் அவதி
பொள்ளாச்சி மகாலிங்கபுரம், டி.கோட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பள்ளி முடிவடையும் மாலை நேரங்களில் மாணவ-மாணவிகளை அழைத்து செல்ல வரும் ஆட்டோக்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துகின்றனர். மேலும் பெற்றோரும் இருசக்கர வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் மாணவ-மாணவி கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பள்ளி முன் போக்குவரத்து பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரசாத், பொள்ளாச்சி.
சேதமடைந்த இருக்கைகள்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் அமரும் வகையில் நிழற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் போடப்பட்டுள்ள மரப்பலகையினால் ஆன இருக்கைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இதில் அமர்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த இருக்கைகளை சரிசெய்ய வேண்டும்.
கனகவேல், செல்வபுரம்.
தெருநாய்கள் தொல்லை
கோவை ரத்தினபுரி, உக்கடம், நியூ சித்தாபுதூர் உள்பட மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி கடிக்கிறது. இதனால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கண்ணன், கோவை.
வேகத்தடை வேண்டும்
கோவை அருேக உள்ள சோமனூர் கிருஷ்ணாபுரம் செந்தில்நகர் பஸ் நிறுத்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அங்கு பயணிகள் சாலையை கடக்க முடிவது இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் சாலையை கடக்க வசதி செய்ய வேண்டும். இல்லை என்றால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
கலையரசன், சோமனூர்.
சாலையில் நடமாடும் கால்நடைகள்
கோவை சாய்பாபாகாலனி சிக்னல் அருகே கால்நடைகள் தொல்லை அதிகமாக உள்ளது. தினமும் காலையில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் அங்கு சாலையில் சுற்றி வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. அத்துடன் திடீரென்று மாடுகள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தவும் செய்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றும் கால்நடைகளை பிடிப்பதுடன், அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள்முருகன், கோவை.
விபத்து ஏற்படும் அபாயம்
கோவை காந்திபுரம் ஜி.பி. சிக்னல் பகுதியில் பிச்சைக்காரர்கள் அதிகம்பேர் நின்று பிச்சை எடுத்து வருகிறார்கள். வாகனங்கள் செல்ல பச்சை விளக்கு ஒளிரும்போது சிலர் அங்கு வாகனங்களுக்குள் புகுந்து பிச்சை எடுப்பதால், விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சிக்னலில் பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும். அத்துடன் பிச்சை எடுக்கும் ஆதரவற்றவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஆனந்தன், காந்திபுரம்.
குண்டும்-குழியுமான சாலை
கோவை சத்தி ரோட்டில் உள்ள கணபதி பஸ்நிறுத்தம் அருகே சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு கான்கிரீட் கலவை கொட்டப்பட்டது. தற்போது அந்த கவலையும் சேதமடைந்ததால் அந்த வழியாக வாகனங்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
நிர்மல்குமார், கணபதி.
Related Tags :
Next Story