விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.20 லட்சம் கலசங்கள் திருட்டு கும்பாபிஷேகம் நடந்து 22 நாட்களில் மர்மநபர்கள் கைவரிசை


விருத்தாசலம்  விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.20 லட்சம் கலசங்கள் திருட்டு கும்பாபிஷேகம் நடந்து 22 நாட்களில் மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 1 March 2022 10:32 PM IST (Updated: 1 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கலசங்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.


விருத்தாசலம், 

கும்பாபிஷேகம் நடந்து 22 நாட்களில் நிகழ்ந்த இந்த திருட்டு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விருத்தகிரீஸ்வரர் கோவில் 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. விருத்தாம்பிகை அம்மன், தனி சன்னதியில் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரத்தில் 3 கலசங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கலசமும் 3 அடி உயரம் கொண்டது. இந்த கலசங்களில் தலா 100 கிராம் தங்கமுலாம் பூசப்பட்டு இருந்தது.

3 கலசங்கள் மாயம் 

நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகள் அனைத்தும் முடிந்தவுடன்,  செயல் அலுவலர் மாலா மற்றும் சிவாச்சாரியர்கள் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இரவு காவலர்கள் மட்டும் கண்காணிப்பு பணியில் இருந்தனர். 

நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டதும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அம்மன் சன்னதியில் கோபுர தரிசனம் செய்தபோது, அங்கு 3 கலசங்கள் இல்லாததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

நள்ளிரவில் திருட்டு 

அதன்பேரில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கோவில் கோபுரத்தை பார்வையிட்டனர். 

பின்னர் கோவிலில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், நள்ளிரவு 12 மணியளவில் கோபுரத்தில் கலசங்கள் இருந்ததை பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் பிறகே அம்மன் சன்னதி கோபுரத்தில் உள்ள 3 கலசங்களையும் மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 

கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு 

மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த 32 கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அம்மன் சன்னதிக்கு மேல் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதுபற்றி அறிந்த மர்ம நபர்கள்தான் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

அதேசமயம் கோவிலில் உள்ள 4 நுழைவு வாயிலிலும் கதவுகள் மூடப்பட்டு இருந்தன. இதன் வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைய வாய்ப்பு இல்லை. ஆனால், வடக்கு கோபுரத்தின் அருகில் சுற்றுச்சுவரை ஒட்டி பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. இதன் வழியாக மர்மநபர்கள் ஏறி கோவிலுக்குள் புகுந்து கோபுரத்தில் இருந்த கலசங்களை திருடிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

ரூ.20 லட்சம் மதிப்பு

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

திருட்டு போன 3 கலசங்களின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகம் நடந்து 22 நாட்களே ஆன நிலையில் அம்மன் சன்னதியில் கலசங்கள் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story