துபாயில் இருந்து பேரீச்சம் பழத்துக்கு இடையே பதுக்கி தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1¼ கோடி வெளிநாட்டு சிகரெட் சிக்கியது மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி


துபாயில் இருந்து பேரீச்சம் பழத்துக்கு இடையே பதுக்கி தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1¼ கோடி வெளிநாட்டு சிகரெட் சிக்கியது மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 2 March 2022 1:12 AM IST (Updated: 2 March 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1¼ கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கியது

தூத்துக்குடி:
துபாயில் இருந்து பேரீச்சம் பழத்துக்கு இடையே பதுக்கி தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1¼ கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கியது.
கண்காணிப்பு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக அவ்வப்போது செம்மரக்கட்டைகள், போதை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்தும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து தூத்துக்குடிக்கு வரி ஏய்ப்பு செய்யும் வகையில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக பெங்களூருவை சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
கன்டெய்னரில் சோதனை
அப்போது துபாய் ஜபல் அலி துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு ஒரு கன்டெய்னர் வந்தது. அதில் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த கன்டெய்னரை சந்தேகத்தின் பேரில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திறந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், முதல் இரண்டு அடுக்குகளில் பேரீச்சம் பழம் பெட்டிகள் இருந்தன. அதன் பின்புறம் வெளிநாட்டு சிகரெட் பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.1¼ கோடி
உடனடியாக அதிகாரிகள் சோதனையில் சிக்கிய சிகரெட் பெட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என்று கூறப்படுகிறது.
சிகரெட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சுமார் 160 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதே போன்று சிகரெட் லேபிளில் விதிமுறைகளின்படி பல்வேறு விவரங்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.
இதனால் சிகரெட் கடத்தி கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகரெட்டை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story