சிவன் கோவில்களில் விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு
மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
நெல்லை:
மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை வணங்குதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய மகா சிவராத்திரி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று இரவு விடிய, விடிய 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் மகா சிவராத்திரி பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 9 மணிக்கு 2-வது கால பூஜை, நள்ளிரவு 1 மணிக்கு 3-வது கால பூஜை, அதிகாலை 3 மணிக்கு 4-வது கால பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. ஒவ்வொரு கால பூஜையின் போதும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய வழிபாடு நடத்தினார்கள்.
வண்ண விளக்குகள்
இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலைஅரங்கில் பக்தி இசை நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நந்தி சிலை முன்பு 5,008 ருத்ராட்சங்களால் சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதே போல் அம்பாள் சன்னதியில் நவதானியங்களால் சிவலிங்கமும், ஆறுமுக நயினார் சன்னதியில் நடராஜர் கோலமும் தத்ரூபமாக அமைத்திருந்தனர்.
சிவன் கோவில்கள்
இதேபோல் பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவில், நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை மீனாட்சி -சுந்தரேசுவரர், கண்ணம்மன் கோவில் தெரு மீனாட்சி -சொக்கநாதர் கோவில், கைலாசபுரம் கைலாசநாதர் கோவில், கொக்கிரகுளம் காசிவிசுவநாதர்- விசாலாட்சி அம்மன் கோவில், மேல குலவணிகர்புரம் தான்தோன்றியப்பர் கோவில், நெல்லை அருகன்குளம் ராமலிங்க சுவாமி கோவில் ஆகியவற்றில் நேற்று இரவு விடிய விடிய 4 கால சிறப்பு பூஜையும், அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
சீவலப்பேரி காசி விசுவநாதர்-விசாலாட்சி அம்பாள் நேற்று மகா சிவராத்திரி பூஜை, வழிபாடு நடைபெற்றது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள சக்திநாத ஸ்படிகலிங்க சுவாமிக்கு மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவில் 4 கால அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. ஸ்படிக லிங்கத்துக்கு விபூதி அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது.
கோடகநல்லூர் கைலாயநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story