புகார் பெட்டி
புகார் பெட்டி
மின்கம்பங்கள் அகற்றப்பட்டன
நாகர்கோவில் கேப் ரோட்டில் அண்ணா பஸ்நிலையம் அருகே சாலையோரத்தில் நடைபாதையில் பாதசாரிகளுக்கு இடையூறாக மின்கம்பங்கள் போடப்பட்டிருந்தன. இதனால், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
குடிநீர் வரவில்லை
ஈசாந்திமங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 1-வது வார்டு ஞானதாசபுரம், குழிவிளை, குளத்தங்கரை பகுதிகளில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக குழாய்களில் குடிநீர் வரவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக குடங்களை எடுத்து கொண்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முறையாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், ஞானதாசபுரம்.
சாலையில் வீணாகும் குடிநீர்
பூதப்பாண்டி பேரூராட்சி காந்தி ஜீ நகரின் நுழைவு வாயிலில் சாலையின் அடியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த பல நாட்களாக குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், வீடுகளுக்கு சரியாக தண்ணீர் செல்வதில்லை. மேலும், இந்த தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்று கொசு உற்பத்தி அதிகமாகி தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-வை.பி.விஜயமணியன், பூதப்பாண்டி.
சாலையோரம் ஆபத்தான மரம்
குளச்சலில் ஒரு தனியார் மருத்துவமனை முன்பு சாலையோரம் ஒரு மரம் நிற்கிறது. இந்த மரத்தின் ஒரு பகுதியில் கிளைகள் உலர்ந்து பட்டு நிற்கிறது. பலத்த காற்று வீசும் ேபாது உலர்ந்த கிளைகள் முறிந்து விழுகின்றன. இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், காற்று, மழைக்காலங்களில் இந்த மரம் முறிந்து விழுந்து பேராபத்து ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, சாலையோரம் ஆபத்தான நிலையில் நிற்கும் மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எஸ்.முகமது சபீர், குளச்சல்.
அகற்ற வேண்டிய மின்கம்பம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு அறுகுவிளை மேற்கு தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வைகோகுமார், கிருஷ்ணன்கோவில்.
சாலையை சீரமைக்க வேண்டும்
வடசேரியில் இருந்து தடிக்காரன்கோணம் செல்லும் சாலை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக நாவல்காடு முதல் துவரங்காடு வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.
-----
Related Tags :
Next Story