தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கிய குப்பை
மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் எஸ்.என்.கே. வீதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அதில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி இருக்கிறது. தேங்கிய குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. பொதுமக்களுக்கு தொற்றுேநாய் பரவும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, பெத்தானியாபுரம்.
சாலையில் பள்ளம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி கிராமம் 2, 3-வது வார்டு சந்திப்பில் உள்ள வாருகால் உடைந்து சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பெரியவர்கள், குழந்தைகள் இதில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த வாருகாலை சரிசெய்து பள்ளத்தை மூட வேண்டும்.
மாரிமுத்து, வத்திராயிருப்பு.
தொற்றுநோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் என்.என்.பார்க்-உமர்புலவர் தெருவில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயநிலை நீடிக்கிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
ஆக்கிரமிப்பு
மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதி சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. வாகனங்கள் அதிக அளவில் செல்லும் இந்த சாலை ஆக்கிரமிக்கபட்டுள்ளது. இதனால் தினமும் சிறு, சிறு விபத்துகள் இப்பகுதியில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அசோக் குமார், மதுரை.
Related Tags :
Next Story