உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்; 4-ந் தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது


உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்; 4-ந் தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது
x
தினத்தந்தி 1 March 2022 10:13 PM GMT (Updated: 1 March 2022 10:13 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள்.

ஈரோடு
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள்.
கவுன்சிலர்கள்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடந்தது. பின்னர் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று (புதன்கிழமை) அந்தந்த உள்ளாட்சி மன்றங்களில் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் 792 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. 2 பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு முன்பு இறந்தனர். எனவே அந்த 2 வார்டுகள் தவிர 790 வார்டுகளில் கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். இதில் 21 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்கிறார்கள்
தேர்ந்து எடுக்கப்பட்ட 790 கவுன்சிலர்களும் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள். ஈரோடு மாநகராட்சியில் 60 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடக்கிறது.
இதற்காக மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கம் தயார் நிலையில் உள்ளது. மேலும் விழாவையொட்டி புதிய கவுன்சிலர்களின் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்பார்கள் என்பதால் ஈரோடு மாநகராட்சிஅலுவலக வளாகம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது. பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. மாமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வளாகத்தில் இருப்பவர்களும் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. கவுன்சிலர்கள் அனைவருக்கும் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஆணையாளருமான சிவக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஏற்பாடுகளை ஆணையாளர் சிவக்குமார் தலைமையில் செயற்பொறியாளர்கள் விஜயகுமார், ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர்கள் விஜயா, சண்முகவடிவு மற்றும் அதிகாரிகள் செய்து உள்ளனர்.

Next Story