ஈரோட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டவர் கைது- 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்
ஈரோட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ள நோட்டு
ஈரோடு பவளத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சலாம் (வயது 47). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி ஈரோடு பெருந்துறைரோடு ஆசிரியர் காலனி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார். அங்கு சலாம் ரூ.2 ஆயிரம் புதிய நோட்டை கொடுத்து சில்லரை கேட்டு உள்ளார். அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த பங்க் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த ரூபாய் நோட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சலாமை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கொடுமுடி சுல்தான்பேட்டையை சேர்ந்த ராஜா என்கிற ஷேக்முகைதீன் (49), திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தை சேர்ந்த சதீஸ் (37) ஆகியோருக்கு இதில் தொடர்பு இருந்ததும், சதீஸ் பலருக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.
கைது
இந்த கள்ள நோட்டு வழக்கு ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதைத்தொடர்ந்து கொடுமுடியில் பதுங்கி இருந்த ராஜா என்கிற ஷேக்முகைதீனை போலீசார் கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஸ் முக்கிய புள்ளியாக இருந்து வந்ததும், அவர் தான் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சதீசை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டினார்கள்.
இந்தநிலையில் பவானி லட்சுமிநகர் பகுதியில் சதீஸ் இருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், போலீஸ் ஏட்டுகள் சண்முகம், மகஷே் ஆகியோர் விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சதீசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சதீஸ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story