குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப  மறுத்து பெற்றோர் போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2022 6:26 PM IST (Updated: 2 March 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே காலியாகவுள்ள ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தி பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே காலியாகவுள்ள ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தி பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர் காலி பணியிடம்
ஓட்டப்பிடாரம் தாலுகா புளியமரத்து அரசடி கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி உள்ளது.  இந்தப் பள்ளியில் 104 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 52 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தலைமையாசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.
 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்க கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 ஆசிரியர்கள் இருந்தனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மற்றொரு ஆசிரியர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு சொந்த ஊரான உடன்குடி தாலுகாவிலுள்ள பள்ளியில் மாற்றுப் பணியில் பணியமர்த்தப்பட்டு விட்டார்.
இதை தொடர்ந்து ஒரு ஆசிரியர் மட்டும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவித்து வந்துள்ளார். அந்த ஓர் ஆசிரியரும் பதவி உயர்வு பெற்று கடந்த 28-ந் தேதி வெளியூரிலுள்ள வேறுபள்ளிக்கு சென்றுவிட்டார். இதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம்  வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ஆசிரியர் பணியிடம் முற்றிலும் காலியாக உள்ளது.
பெற்றோர்கள் போராட்டம்
இதனால் நேற்று முன்தினம் இந்த மாணவ, மாணவிகளுக்கு கற்று கொடுப்பதற்கு ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. இதைஅறிந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்த நேற்று காலையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்துவிட்டனர். குழந்தைகளை பள்ளிக்கூட சமுதாய நலக் கூடத்தில் தங்க வைத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் கிராமபொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
 இதை அறிந்த ஓட்டப்பிடாரம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சரஸ்வதி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பவினிந்திஸ்வரன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுந்தேனசபுரம் கிராமத்தில் தொடக்கப் பள்ளியிலிருந்து இருந்து ஓராசிரியர் மாற்றுப் பணியில் அமர்த்த உடனடியாக அதிகாரிகள் உத்தரவிட்டனர். மற்ற ஆசிரியர் பணியிடத்தை விரைவில் நிரப்ப வேண்டும் என வலியுறுத்திய பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு மாணவ மாணவிகளை அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story