கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சாம்பல் புதன்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். மேலும் அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று முதல் தொடங்கியது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.
ஊட்டி சேரிங்கிராசில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் காலை 7 மணிக்கு சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடந்தது. நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை தாங்கி தவக்கால துவக்க திருப்பலியை நிறைவேற்றினார். தொடர்ந்து கடந்த ஆண்டு காய்ந்த குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி, அதனை மந்திரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு பூசப்பட்டது.
போரில் அமைதி ஏற்பட...
மேலும் ரஷ்யா-உக்ரைன் போரில் அமைதி ஏற்படவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. இதில் பங்கு தந்தை ஜான் ஜோசப் ஸ்தனிஸ் மற்றும் பங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தவக்காலத்தை முன்னிட்டு தினமும் சிலுவை பாதை தியானித்தல், திருத்தல பயணங்கள் சென்று வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் நடந்த சிறப்பு ஆராதனையில் தவக்கால தொடக்க திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்களுக்கு சாம்பலை கொண்டு நெற்றியில் பூசப்பட்டது.
சிலுவை பாதை தியானம்
சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்தில் காலை 8 மணிக்கு பங்கு குரு இம்மானுவேல் வேழவேந்தன் தலைமையிலும், புனித தாமஸ் ஆலயத்தில் மாலை 6.30 மணிக்கு பங்கு தந்தை ஜெரேமியா ஆல்பிரட் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதேபோன்று புனித ஸ்டீபன் ஆலயம், புனித வெஸ்லி ஆலயம், காந்தல் குருசடி ஆலயம், பிங்கர்போஸ்ட் புனித திரேசன்னை ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் சாம்பல் புதனை ஒட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தவக்காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிலுவை பாதை தியானம் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story