பவானியில் பிரசித்திபெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கானோர் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்


பவானியில் பிரசித்திபெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கானோர் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 2 March 2022 8:10 PM IST (Updated: 2 March 2022 8:10 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் அம்மன் வேடங்கள் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் அம்மன் வேடங்கள் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
செல்லியாண்டியம்மன் திருவிழா
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. பவானி ஆறும், காவிரி ஆறும், கண்ணுக்கு புலப்படாத அமுத நதியும் சங்கமிக்கும் பவானி கூடுதுறைக்கு சற்று தொலையில் பவானி நகரின் மத்திய பகுதியில் வடக்குப்பார்த்து அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் தாயாக பவானி செல்லியாண்டியம்மன் உள்ளார்.
பவானி மட்டுமின்றி 18 பட்டி கிராம மக்களுக்கும் அதிதேவதையாக இருக்கும் செல்லியாண்டியம்மன் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் வகையறா கோவில்களின் திருவிழா கடந்த பிப்ரவரி 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22-ந் தேதி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. 23-ந் தேதி கொடிஏற்று விழா நடந்தது.
சேறு பூசும் வழிபாடு
செல்லியாண்டியம்மன் கோவிலின் சிறப்பு வழிபாடாக கருதப்படும் பக்தர்கள் நேரடியாக சாமிக்கு நீராட்டு நடத்தும் பூஜை நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி முதல் நடந்தது. பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்கள் காவிரி, பவானி தீர்த்தங்களை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனுக்கு நீராட்டு பூஜை செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் பூமிதி விழா மாரியம்மன் கோவிலில் நடந்தது.
நேற்று செல்லியாண்டியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான சேறு பூசும் விழா நடந்தது. காலை 10 மணிக்கு செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பவானி நகரின் எல்லையில் உள்ள எல்லைமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் அழைத்தல் பூஜை நடந்தது. குதிரை துளுக்கி அனுமதி அளித்ததும் எல்லையம்மன் கோவிலில் இருந்து படைக்கல ஊர்வலம் தொடங்கியது. முத்துக்குடை, குதிரையுடன் பூசாரி படைக்கலத்தை சுமந்து வர பக்தர்கள் செல்லியாண்டியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
வேடமிட்ட பக்தர்கள்
ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் எல்லைமாரியம்மன் கோவில் அருகே தண்ணீரில் நனைந்த சேற்றினை எடுத்து உடலில் பூசிக்கொண்டனர். இதுபோல் பக்தர்கள் பலரும் பல வண்ண சாயப்பொடிகளை உடலில் பூசிக்கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பவானி காய்கறி சந்தையை சேர்ந்த வியாபாரிகள் தங்கள் உடலில் காய்கறிகளால் ஆன மாலைகளை அணிந்து அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சிவபெருமான், அம்மன், பத்ரகாளி, துர்க்கை அம்மன் வேடங்களிலும் பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஒருவர் சிவனால் தமிழ், தமிழால் சிவன் என்ற பதாகையுடன் சிவபெருமான் வேடமிட்ட ஒருவருடன் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார். 10 தலை ராவணன் வேடம் உள்பட பல்வேறு மாறு வேடங்களிலும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். இளைஞர்கள் பலர் அலுமினிய நிறத்தில் உடலில் பெயிண்ட் பூசி வந்தனர்.
நேர்ச்சைக்கடன்
ஊர்வலம் வந்த பாதை நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்து வழிபாடுகள் செய்தனர். மேலும் நேர்ச்சைக்கடனாக காய்கறிகள், உணவுப்பொருட்களை வீசினார்கள். அதனை ஊர்வலத்தில் வந்தவர்கள் போட்டிப்போட்டு எடுத்து சேகரித்தனர். உப்பு-மிளகுடன் சில்லரை காசுகளை வைத்தும் பக்தர்கள் நேர்ச்சைக்கடனாக வீசினார்கள். அந்த காசுகளை சேகரிக்க பக்தர்கள் போட்டிப்போட்டனர். புத்தம் புதிய ஆடைகள், ஜவுளிகளையும் சிலர் வீசி நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.
பக்தர்களுக்கு நீர் மோர், கூழ் ஆகியவை வழங்கப்பட்டது. தார் ரோட்டின் சூட்டை தணிக்க தண்ணீர் ஊற்றப்பட்டது. மாலை 4 மணி அளவில் ஊர்வலம் கோவிலை அடைந்தது. நேற்று பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது. 
தேரோட்டம்
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து கம்பம் எடுத்து ஆற்றில் விடும் நிகழ்வு நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், 5-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப விழாவும் நடக்கிறது. 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அதிகாரிகள் செய்து உள்ளனர்.
நோய்கள் நீங்கி...
சேறு பூசும் விழா குறித்து பவானியை சேர்ந்த மூத்த பக்தர் ஒருவர் கூறியதாவது:-
பவானி என்பது மிகச்சிறந்த ஆன்மிக தலமாகும். 3 ஜீவநதிகள் சங்கமிக்கும் கூடுதுறையாக உள்ளது. இங்கு நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பதால் முன்னோர்களுக்கு திதி-தர்ப்பண பூஜைகள் செய்வதில் முக்கிய தலமாக இது உள்ளது. 
மண்ணை பக்தியுடன் உடலில் பூசிக்கொள்வதால் பல நோய்கள் நீங்கி பக்தர்கள் அம்மனுக்கு நேர்ச்சைக்கடன் செலுத்தி வந்தனர். இப்போது ரசாயன சாயங்களை உடலில் பூசுவதால் பல நோய்கள் வரும் அபாயம் உள்ளது. எனவே கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபத்தான பாதைகளுக்கு செல்லாமல் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் மண்சேற்றை மட்டும் உடலில் பூசுவதற்கு ஏற்ப, கோவில் நிர்வாகிகள் தூய்மையான புனித மண் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story