கோவில்களில் மகா சிவராத்திரி விழா


கோவில்களில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 2 March 2022 8:11 PM IST (Updated: 2 March 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம், ஏரல் பகுதி கோவில்களில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

ஏரல்:
குலசேகரன்பட்டினம், ஏரல் பகுதி கோவில்களில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி விழா
ஏரல் சிவன் கோவில், சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோவில், திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோவில், மாரமங்கலம் சந்திரசேகர சுவாமி கோவில், சிவகளை சோரநாதவிநாயகர், சொக்கநாதர் ஆகிய கோவில்களில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 4 கால பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு குத்து விளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குலசேகரன்பட்டினம்
குலசேகரன்பட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மகா சிவராத்திரி உற்சவ விழா நடைபெற்றது. 
இதை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 28-ந்தேதி இரவு 8மணிக்கு மூன்று முகம் கொண்ட படலம் வீதி உலா வருதல் நடைபெற்றது. 
மகாசிவராத்திரி அன்று திருவிளக்கு பூஜை மற்றும் நான்காம் கால பூஜையில் அங்காள பரமேஸ்வரி அம்பாளுக்கு திருமஞ்சனக் குடம் எடுத்து சக்தி நிறுத்தப்படுதல் நடைபெற்றது. நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு மேல் கொடியிறக்கம் நடைபெற்று கொடிமர பூஜை, பைரவர் பூஜை நடைபெறுகிறது. 
மேலும் பேச்சியம்மன், பிரம்ம ராட்சதை அம்பாளுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அமுது படைத்து சிறப்பு தீபாரதனை, அதன்பின்பு அதிகாலை 6 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

Next Story