174 இளவயது திருமணம் தடுப்பு நிறுத்தம்


174 இளவயது திருமணம் தடுப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 2 March 2022 8:49 PM IST (Updated: 2 March 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஓராண்டில் 174 இளவயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

இதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா தலைமையில், பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த ஓராண்டில் 1,123 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், 6 விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

அதன்மூலம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வியின் அவசியம், இளவயது திருமணத்தின் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால் 174 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன. 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் புகார் கொடுக்க முன்வந்தனர். இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டதோடு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மாணவர்கள், அவர்களின் பெற்றோரை சந்தித்து போலீசார் அறிவுரைகள் வழங்குகின்றனர். 

அதன்மூலம் இதுவரை 30 மாணவர்கள், 25 மாணவிகள் என மொத்தம் 55 பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டினார்.

Next Story