தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 513 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு


தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 513 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 2 March 2022 9:25 PM IST (Updated: 2 March 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 513 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

தேனி:
தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 513 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடந்தது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் உள்ள 177 கவுன்சிலர் பதவிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 513 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 5 பேரூராட்சி கவுன்சிலர்கள் என 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 506 பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து கவுன்சிலர்களை தேர்வு செய்தனர். 
இந்தநிலையில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. முன்னதாக மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அந்தந்த அலுவலகங்களில் கூட்டரங்கில் பதவி ஏற்பு விழா நடந்தது. நகராட்சிகளில் நகராட்சி ஆணையாளர்களும், பேரூராட்சிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்களும் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். அப்போது 513 கவுன்சிலர்களும் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
நகராட்சிகள்
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் 33 கவுன்சிலர்களும் பதவி ஏற்றனர். இந்த பதவி ஏற்பு விழாவை காண கூட்டரங்கில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், கவுன்சிலர்களின் குடும்பத்தினர் திரண்டனர். பதவி ஏற்பு விழாவை காண்பதற்காக நகராட்சி அலுவலக வளாகம், 2-வது தளம் ஆகிய இடங்களில் எல்.இ.டி. டி.வி.க்கள் வைத்து பதவி ஏற்பு விழா காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தபடி இந்த காட்சிகளை கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பார்த்தனர்.
இதேபோல் பெரியகுளம் நகராட்சியில் 30 கவுன்சிலர்களுக்கு ஆணையாளர் புனிதனும், சின்னமனூர் நகராட்சியில் 27 கவுன்சிலர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தனும், போடி நகராட்சியில் 33 கவுன்சிலர்களுக்கு ஆணையாளர் சகிலாவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர். கம்பம் நகராட்சியில் 33 கவுன்சிலர்களுக்கு ஆணையாளர் பாலமுருகனும், கூடலூர் நகராட்சியில் 21 கவுன்சிலர்களுக்கு ஆணையாளர் சித்தார்த்தனும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
பேரூராட்சிகள்
பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு, அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர். அதன்படி, அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் சுதாராணியும், ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 18 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியனும், உத்தமபாளையம் பேரூராட்சியில் 18கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கணேசனும், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் மல்லிகாவும், ஓடைப்பட்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கணேசனும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.
குச்சனூர் பேரூராட்சியில் 12 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் சசிகலாவும், கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கங்காதரனும், கோம்பை பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் அசோகனும், தாமரைக்குளம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் பசீர் அகமதுவும், தென்கரை பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் முகமது இப்ராகிமும், தேவதானப்பட்டி பேரூராட்சியில் 18 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் ராதா கிருஷ்ணனும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
வடுகபட்டி, வீரபாண்டி
தேவாரம் பேரூராட்சியில் 18 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் குலோத்துங்கனும், பண்ணைப்புரம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் குளோரி ஏஞ்சல்சும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் ஜெயந்த் மோசசும், போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கார்த்திகேயனும், க.புதுப்பட்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் பாலசுப்பிரமணியனும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.
பூதிப்புரம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் விஜயலட்சுமியும், மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 12 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் திரவியமும், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் இளங்கோவனும், வடுகபட்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் அம்புஜமும், வீரபாண்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் ஆறுமுக நயினாரும், ஹைவேவிஸ் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் மோகன்குமாரும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.
மறைமுக தேர்தல்
பதவி ஏற்பு விழாவில் நகராட்சி அலுவலர், பணியாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கவுன்சிலர்கள் பதவி ஏற்றபோது அவர்களை சார்ந்த கட்சியினரும், அவர்களின் குடும்பத்தினரும் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
இதற்கிடையே நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 

Next Story