தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை எடை போட வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்


தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை எடை போட வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2022 10:33 PM IST (Updated: 2 March 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை எடை போட வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்


கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள வடதொரசலூர், பிரிதிவிமங்களம், திம்மலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விளைபொருட்களை விற்பனைக்காக தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி நேற்று 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், உளுந்து, கம்பு உள்ளிட்ட சுமார் 650-க்கும் மேற்பட்ட தானிய மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு எடுத்து வந்தனர். இ்வ்வாறு விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருட்கள் காலை 6 மணிக்கு எடை போடுவது வழக்கம். ஆனால் காலை 8 மணி வரையிலும் எடை போடவில்லை. 

இதையடுத்து எடை போடும் ஊழியர்களிடம் விளை பொருட்களை ஏன்? எடை போடவில்லை என விவசாயிகள் கேட்டனர். அதற்கு அவர்கள் அதிகாரிகள் எடை போட சொல்லவில்லை, அதிகாரிகள் வந்த பிறகு எடை போடுவோம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் விளைபொருட்களை உடனடியாக எடை போட வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்புள்ள தியாகதுருகம்- திருக்கோவிலூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் பயிற்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், தனிப்பிரிவு போலீஸ்காரர் சீனிவாசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பஞ்சமூர்த்தியிடம் பேசியதாகவும், அவர் விளை பொருட்கள் எடை போடப்படும் என உறுதி அளித்ததாக தெரிவித்தனர். இதனை அடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். தொடர்ந்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் எடை போடப்பட்டது. விவசாயிகள் சாலை மறியலால் தியாகதுருகம்-திருக்கோவிலூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story