கள்ளக்குறிச்சி அருகே பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சி அருகே  பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2022 11:06 PM IST (Updated: 2 March 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலி கிராமம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக காலை 7.30 மணிக்கு கூகையூரிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு டவுன் பஸ் செல்கிறது. அதன் பிறகு காலை 9 மணிக்கு தான் எஸ்.நரையூர் அரசு டவுன் பஸ் கள்ளக்குறிச்சிக்கு செல்கிறது. இந்த பஸ்சில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதால் தாமதம் ஆகி விடுகிறது. இதனால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

 இந்த நிலையில் காந்திநகர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று அங்குள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்லும் வகையில் காலை 8.30 மணியளவில் இந்த வழியாக அரசு டவுன் பஸ்சை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்லும் வகையில் அரசு பஸ்சை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story