பெண் மரணத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானேக்கு போலீசார் சம்மன்
திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானேக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்
மும்பை,
திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானேக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்
தற்கொலை
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(வயது34) கடந்த 2020-ம் ஆண்டு மும்பை பாந்திராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்திற்கு 6 நாட்களுக்கு முன்பு நடிகர் சுஷாந்த சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளரான திஷா சாலியன் என்ற இளம்பெண் மலாடில் உள்ள கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவர்களின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில தொடர்ந்து செய்தி பரவின.
இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி நிருபர்களை சந்தித்த மத்திய மந்திரி நாராயண் ரானே மற்றும் அவரது மகன் நிதேஷ் ரானே எம்.எல்.ஏ. இருவரும் திஷா சாலியன் மரணம் தொடர்பாக சில ஆட்சேபனைக்குறிய கருத்துகளை முன்வைத்தனர்.
மகளிர் ஆணையம் உத்தரவு
இந்தநிலையில் அவதூறு பேசியதற்காக நாராயண் ரானே மற்றும் நிதேஷ் ரானே மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி திஷா சாலியனின் தாயார் வசந்தி சாலியன் மாநில மகளிர் ஆணையத்தை அனுகினார்.
இதையடுத்து மகளிர் அணையம் திஷா சாலியன் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் சமூக ஊடக கணக்குகளை முடக்குவதுடன், நாராயண் ரானே மற்றும் நிதேஷ் ரானே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.
இதன்பேரில் இருவரும் திஷா சாலியன் மரணத்தில் அவதூறு பரப்பியதாக மும்பை மால்வாணி போலீசார் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவான 41-ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் போலீசார் மத்திய மந்திரி நாராயண் ரானே மற்றும் அவரது மகன் நிதேஷ் ரானே இருவரும் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி முன்பு நிதேஷ் ரானே இன்றும் (வியாழக்கிழமை), மத்திய மந்திரி நாராயண் ரானே நாளையும் (வெள்ளிக்கிழமை) ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story