தாசில்தார் உள்பட 3 பேர், போலீசில் ஆஜராக வேண்டும்
தாசில்தார் உள்பட 3 பேர், போலீசில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் அரசுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக பல்வேறு நபர்களுக்கு பட்டா வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அரசு அதிகாரிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே வழக்கில் தொடர்புடைய 9 பேர் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். மனுதாரர்களை கைது செய்ய வேண்டுமானால், அவர்களுக்கு உரிய வாரண்டு அளித்து தான் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தநிலையில் அதே வழக்கில் சம்பந்தப்பட்ட தாசில்தார் ரத்னமாலா, துணை தாசில்தார் மோகன்ராம், நில அளவையர் சக்திவேல் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தது.
இந்தநிலையில் அந்த 3 பேரின் மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று நீதிபதி முரளிசங்கர் பிறப்பித்தார். அதில், மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவர்களை கைது செய்ய வேண்டுமானால் உரிய வாரண்டு பிறப்பித்து அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story