ராணிப்பேட்டை நகராட்சியில் 30 கவுன்சிலர்கள் பதவியேற்பு அதிமுகஉறுப்பினர்கள் மேடை ஏற மறுத்ததால் பரபரப்பு
ராணிப்பேட்டை நகராட்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மேடை ஏற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகராட்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மேடை ஏற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பதவியேற்பு
ராணிப்பேட்டை நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நகரமன்ற உறுப்பினர்களும் பதவியேற்பதற்கான விழா நேற்று காலை நகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏகராஜ் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ருத்ர கோட்டி வரவேற்றார்.
விழாவில் 30 வார்டிலும் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பதற்காக வரிசையாக அழைக்கப்பட்டனர். அதன்படி தி.மு.க.கூட்டணியை சேர்ந்த 23 பேரும், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி வணங்கி பின்னர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல் காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலா ஒருவரும்,சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி வணங்கி பதவி ஏற்றனர்.
அ.தி.மு.க.புறக்கணிப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வதற்காக நகர அ.தி.மு.க. செயலாளரும், 20-வது வார்டில் இருந்து நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கே.பி.சந்தோஷ் தலைமையிலான 4 அ.தி.மு.க. உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
ஆனால் அவர்கள் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் படத்தை எடுத்தால்தான் விழா மேடையில் ஏறி பதவி ஏற்றுக் கொள்வோம், இல்லாவிடில் மேடைக்கு கீழே அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆணையாளரிடம் முறையிட்டனர்.
அரசு நிகழ்ச்சியில் விழா மேடையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் படம் தி.மு.க. கொடியின் கலரில் இருந்தது, எனவும் குற்றம் சாட்டினார்கள். இதனால் விழா மேடை அருகே, சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் 4 பேரும் மேடையில் நடைபெறும் பதவி ஏற்பை புறக்கணிப்பதாக கூறி அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விழாவில் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன், சோனியா, மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தனியாக பதவியேற்றனர்
நிகழ்ச்சி முடிவடைந்ததும், நகராட்சி ஆணையாளரின் அறைக்குள் கே.பி.சந்தோஷம் உள்ளிட்ட 4 அ.திமுக உறுப்பினர்கள் நகரமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Related Tags :
Next Story