பதவியேற்றதும் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 45 கவுன்சிலர்கள் சுற்றுலா புறப்பட்டனர்
சிவகாசி மாநகராட்சியில் பதவியேற்ற கையோடு தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 45 கவுன்சிலர்கள் குடும்பத்துடன் பஸ்களில் உற்சாகமாக சுற்றுலா புறப்பட்டுச்சென்றனர்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சியில் பதவியேற்ற கையோடு தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 45 கவுன்சிலர்கள் குடும்பத்துடன் பஸ்களில் உற்சாகமாக சுற்றுலா புறப்பட்டுச்சென்றனர்.
சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள்
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களில் 24 பேர் வெற்றி பெற்று இருந்தனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 6 பேரும், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்ட தலா ஒருவரும் வெற்றி பெற்றனர். மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 32 வார்டுகளில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
இதற்கிடையே சுயேச்சையாக வெற்றி பெற்ற மகேசுவரி, தங்கபாண்டி செல்வி மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் கதிரவன் ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க. ஆதரவு கவுன்சிலர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது.
அ.தி.மு.க.வினர் கட்சி தாவல்
இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 கவுன்சிலர்களில் 9 பேர் சென்னையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தனர். இதைதொடர்ந்து தி.மு.க. ஆதரவு கவுன்சிலர்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்த சுயேச்சை வேட்பாளர் சாமுவேலும் தி.மு.க. ஆதரவு கவுன்சிலராக மாறினார். இதனால் மாநகராட்சியில் தி.மு.க. அணியின் பலம் 45-ஆக உயர்ந்தது.
எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வை சேர்ந்த சாந்தி சரவணன், கரைமுருகன், பா.ஜ.க. வை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் உள்ளனர்.
சுற்றுலா புறப்பட்டனர்
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் 45 பேரும் நேற்று சிவகாசி மாநகராட்சி கூட்ட அரங்கில் பதவி ஏற்றுக்கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், பதவி ஏற்ற கையோடு தி.மு.க. அணியை சேர்ந்த 45 கவுன்சிலர்களும் அவர்களது குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். இதற்காக 2 சிறப்பு பஸ்களை அமர்த்தி இருந்தனர்.
நாளை காலை வரை கன்னியாகுமரியில் இருக்கும் அவர்கள் பின்னர் அங்கிருந்து புறப்படுகிறார்கள். தி.மு.க. தலைமை யாரை மேயர் மற்றும் துணை மேயராக அறிவிக்க இருக்கிறதோ அவர்களை ஆதரித்து நாளை ஓட்டளிப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story