ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக பதவி ஏற்க வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்


ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக பதவி ஏற்க வந்த  அ.தி.மு.க. கவுன்சிலர்கள்
x

திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்துக்கு ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக பதவி ஏற்க வந்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை:
திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்துக்கு ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக பதவி ஏற்க வந்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரூராட்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த பேரூராட்சியில் தி.மு.க. வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும், 2 வார்டுகளில் காங்கிரசும், 9 வார்டுகளில் அ.தி.மு.க.வும், ஒரு வார்டில் பா.ஜனதாவும், ஒரு வார்டில் தே.மு.தி.க.வும், மற்ற 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

இந்தநிலையில் நேற்று கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர், பா.ஜ.க. கவுன்சிலர் ஆகியோர் வாகனங்களில் வந்து ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி அருகில் இறங்கி திரண்டு நின்றனர்.

தலையில் ஹெல்மெட்

பின்னர் அங்கிருந்து பெண் கவுன்சிலர்கள் உள்பட அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் என மொத்தம் 10 பேர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டனர்.

பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்ததும் அங்கு கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கோபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற கவுன்சிலர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஹெல்மெட் அணிந்தது ஏன்?

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து பதவி ஏற்றது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தங்கள் கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளிக்காவிட்டால் பதவி ஏற்க வரும்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மண்டை உடைக்கப்படும் என அலைபேசி மூலம் அச்சுறுத்தி வந்தனர். அ.தி.மு.க. கவுன்சிலரின் உறவினர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.

மக்கள் பிரதிநிதிகளின் உடல், உயிர், உடமைகள், உரிமைகளை பாதுகாக்கவும் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், உயிர்பயத்துடன் தலைகவசம் அணிந்து வந்து கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு

முன்னதாக பதவி ஏற்க வந்த கவுன்சிலர்களை மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பால்துரை, பா.ஜனதா நெல்லை மாவட்ட துணை தலைவர் சாந்தி ராகவன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சாமுவேல், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் டிம்பர் செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி ரமேஷ் உள்பட திரளானவர்கள் வரவேற்றனர்.

Next Story