புகார் பெட்டி
புகார் பெட்டி
சாலையில் பள்ளம்
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் பள்ளம் உள்ளது. மேலும் அந்த சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக தண்ணீர் பாய்கிறது. இதனால் அந்த பள்ளம் பெரியதாகி வருகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ஜான் ஜெயசிங், காஞ்சிர கோடு.
எரியாத தெருவிளக்கு
நாகர்கோவில் மாநகராட்சி 36-வது வார்டில் கோட்டார் சவேரியார் காலனியில் உள்ள மின்கம்பத்தில் கடந்த 10 நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதி வழியாக இரவு நேரத்தில் பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே மின்கம்பத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி தெருவிளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராபின், கோட்டார்.
சாலை விபத்து அபாயம்
நாகர்கோவில் பறக்கை ரோட்டில் சிறுவர்கள் அதிவேகத்துடன் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை விபத்து நடப்பதை தடுக்கும் வகையில், இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து, அதிவேகத்தில் செல்பவர்களுக்கு அறிவுரை கூற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.சிவபிரகாஷ், இசங்கன்விளை.
தூர்வார வேண்டிய குளம்
பன்னிபாகம் 7-வது சிவாலயம் கோவில் தெப்பக்குளத்தில் செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் நடமாட வாய்ப்பு உள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் கால்களை கழுவ வசதியாக குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினிஷ், வழிக்கலம்பாடு.
தெருவிளக்கு அமைக்க வேண்டும்
தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.காலனி முதல் புதுகிராமம் வரை சாலையில் தினமும் ஏராளமானவர்கள் செல்கிறார்கள். இந்த பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஷாக், புதுகிராமம்.
சீரமைக்க வேண்டிய சாலை
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து அண்ணா பஸ் நிலையத்துக்கு செல்லும் கேப் ரோட்டில் சாலை சேதமடைந்து ஜல்லிகள் சிதறி கிடக்கிறது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புகழேந்தி, ஆரல்வாய்மொழி.
சேதமடைந்த சாலை
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் நவமியாபுரம் முதல் தென்தாமரைகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.
Related Tags :
Next Story