தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள்
தஞ்சை அருகே கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை அருகே கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இந்த மாவட்டங்களை டெல்டா மாவட்டம் என்றும் அழைப்பது உண்டு. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.
டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 3.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆன்லைனில் பதிவு
இந்நிலையில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுவதால் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
குறிப்பாக தஞ்சையை அடுத்த ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் நெல் குவியல், குவியலாக தேங்கி கிடக்கிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளது. இந்த நிலையில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மேலும் அச்சம் அடைந்துள்ளனர்.
2 ஆயிரம் மூட்டைகள்
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அறுவடை செய்து 20 நாட்களாக நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை குவித்து வைத்து காத்துக்கிடக்கிறது. தற்போது கொள்முதல் நிலையங்களில் 700 முதல் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். தற்போது ஆன்லைன் பதிவு முறையால் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதால், பழைய முறைப்படி கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும் 3-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்யாவிட்டால் நெல்லைக் கொட்டி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம்.என்றனர்.
Related Tags :
Next Story