சேலத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய கோர்ட்டு ஊழியர் பணி இடைநீக்கம்
சேலத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய கோர்ட்டு ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
சேலம்:
சேலத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய கோர்ட்டு ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மாஜிஸ்திரேட்டுக்கு கத்திக்குத்து
சேலம் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண்-4-ல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் பொன்பாண்டி (வயது 45).
சேலம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (37). ஓமலூர் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக இருந்த இவர் பணிமாறுதல் ஆகி நேற்று முன்தினம் சேலம் கோர்ட்டில் பணிக்கு சேர்ந்தார்.
மாஜிஸ்திரேட்டு பொன்பாண்டி, நேற்று முன்தினம் காலை கோர்ட்டில் உள்ள அவரது அறையில் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற பிரகாஷ், பணிமாறுதல் சம்பந்தமாக அவரிடம் கேட்டு திடீரென்று மாஜிஸ்திரேட்டு பொன்பாண்டியை கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
பணி இடைநீக்கம்
இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் பிரகாசை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரகாசுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து அவர் நேற்று ஓமலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிரகாசை, பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து சேலம் தலைமை நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபீதா உத்தரவிட்டு உள்ளார்.
அடிக்கடி இட மாறுதல் செய்ததால் இந்த தவறை செய்து விட்டேன் என்று பிரகாஷ் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story