நாகர்கோவிலில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியதையொட்டி நாகர்கோவிலில் சாம்பல் புதன் திருப்பலி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்:
கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியதையொட்டி நாகர்கோவிலில் சாம்பல் புதன் திருப்பலி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது.
தவக்காலம்
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்ததையும், மரித்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகைக்கு முன்பு 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பிருப்பது வழக்கம். இதனை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடிப்பார்கள். இந்த நாட்களில் நோன்பிருப்பதோடு, ஏழை எளியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்வார்கள். சாம்பல் புதன் தினத்தில் இருந்து தவக்காலம் தொடங்கும்.
சிறப்பு திருப்பலி
இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் தினமான நேற்று கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமான கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.
கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்த திருப்பலியை மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ், ஆயரின் செயலாளர் சகாய ஆன்டனி, கோட்டார் பேராலய பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ, அருட்பணியாளர் வில்சன் ஆகியோர் இணைந்து நிறைவேற்றினர். திருப்பலியின் போது பங்கேற்ற கிறிஸ்தவர்கள் அனைவரின் நெற்றியிலும் ஆயரும், அருட்பணியாளர்களும் சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டு ஆசீர்வதித்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயங்களில் மாலையில் சிறப்பு ஆராதனை நடந்தது.
Related Tags :
Next Story