மோட்டார் சைக்கிள்கள் மோதல் தொழிலாளி சாவு
பொற்றையடியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தென்தாமரைகுளம்;
நாகர்கோவில் அருகே உள்ள வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் வில்சன் (வயது 22). இவர் பாலிடெக்னிக் முடித்து விட்டு கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் இருந்து வேலை முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பொற்றையடி சந்திப்பை சென்றடைந்த போது எதிர்பாராதவிதமாக மயிலாடி குறுக்குச் சாலையில் இருந்து மெயின் ரோட்டை மற்றொரு மோட்டார் சைக்கிள் கடக்க முயன்றது. இந்தநிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் வில்சன் படுகாயமடைந்தார். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சாமித்தோப்பு அருகில் உள்ள சாஸ்த்தான் கோவில் விளையைச் சேர்ந்த மர வியாபாரி திரவியம் (52), தென்தாமரை குளத்தைச் சேர்ந்த மோசஸ் செல்வராஜ் ஆகியோரும் காயமடைந்தனர். பின்னர் 3 பேரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் வில்சன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வில்சனின் உறவினர் ராஜா தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் திரவியத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story