ஆலங்குடி குருபகவான் கோவிலில் மாசிமகா குருவார விழா


ஆலங்குடி குருபகவாகன் கோவிலில் யாகசாலை பூஜைகள் நடந்தபோது எடுத்தபடம்.
x
ஆலங்குடி குருபகவாகன் கோவிலில் யாகசாலை பூஜைகள் நடந்தபோது எடுத்தபடம்.
தினத்தந்தி 4 March 2022 12:00 AM IST (Updated: 3 March 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி குருபகவான் கோவிலில் மாசிமகா குருவார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நீடாமங்கலம்:-

ஆலங்குடி குருபகவான் கோவிலில் மாசிமகா குருவார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

குருபகவான் கோவில்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு உரிய தலமாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகா குருவாரவிழா நடைபெறுவது வழக்கம். 
அதன்படி இந்த ஆண்டும் நேற்று மாசிமகாகுருவார விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு காலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. இதனையடுத்து அபிஷேகமும், பஞ்சமுக அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து குருவார தரிசனம் நடந்தது. இரவு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தங்ககவச அலங்காரம்

முன்னதாக கலங்காமற்காத்த விநாயகர், மூலவர் குருபகவான், ஏலவார்குழலி அம்மன் சமேத ஆபத்சகாயேஸ்வரர், சுப்பிரமணியர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆபத்சகாயேஸ்வர சாமிக்கு பஞ்சமுக அர்ச்சனை நடைபெற்றது.
மாலையில் ஆபத்சகாயேஸ்வரர் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், மூலவர் குருபகவான் தங்ககவச அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். விநாயகர், ஏலவார் குழலிஅம்மன், முருகன், சனீஸ்வரபகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. 
விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஹரிஹரன், தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். இங்கு வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) 1,008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

Next Story