நெல்லையில் ரூ.33 லட்சம் செல்போன்கள் மீட்பு
நெல்லையில் மாயமான ரூ.33 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டது. அதனை உரிமையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் வழங்கினார்.
நெல்லை:
நெல்லையில் மாயமான ரூ.33 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டது. அதனை உரிமையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் வழங்கினார்.
செல்போன்கள் மீட்பு
நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், செல்போன்கள் மாயமானதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் துரைகுமார் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அடங்கிய போலீசார், செல்போன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் போலீசார் ரூ.33 லட்சத்து 5 ஆயிரத்து 500 மதிப்பிலான 233 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து கண்டுபிடித்து மீட்டுள்ளனர். அந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் துரைகுமார் கலந்து கொண்டு, உரியவர்களிடம் செல்போன்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மோசடி
இணையதளம் மூலமாக, வேலை வாங்கித் தருவதாகவும், பரிசு விழுந்து இருப்பதாகவும் கூறி மோசடி செய்யப்பட்டதாக கொடுத்த புகார்களின் பேரில் போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி 5 பேருக்கு மொத்தம் ரூ.26 லட்சத்து 73 ஆயிரத்து 458-ஐ வங்கி மூலம் திரும்ப பெற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நபருக்கு மட்டும் ரூ.22 லட்சத்து 58 ஆயிரம் திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 23 பேரிடம் மோசடி செய்யப்பட்ட 8 லட்சத்து 70 ஆயிரத்து 252 ரூபாயை மோசடி செய்தவர்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாத அளவு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை உரியவர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புகார் அளிக்கலாம்
சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெரும்பாலும் இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் வடமாநிலத்தவர்களாகவே இருக்கின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அறிமுகம் இல்லாத நபர்கள் உங்கள் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விவரம், ஏ.டி.எம். அட்டை விவரம், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓ.டி.பி.) கேட்டால் கொடுக்க கூடாது. குறுந்தகவல் மூலம் ஏதாவது லிங்க் வந்தால் அதனை உடனே கிளிக் செய்யக்கூடாது. சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வீடியோ கால் வந்தால் அதனை புறக்கணிக்க வேண்டும்.
இதுகுறித்து 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
துறை ரீதியான நடவடிக்கை
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் காரில் ஒரு பெண்ணுடன் தனியாக பேசிக்கொண்டிருந்த போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்போனில் ஆன்லைன் விளையாட்டு மூலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நெல்லை மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் டி.பி. சுரேஷ்குமார் (கிழக்கு), கே.சுரேஷ்குமார் (மேற்கு), கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் சங்கர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story