பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 பெண்கள் படுகாயம்


பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 பெண்கள் படுகாயம்
x
தினத்தந்தி 4 March 2022 12:18 AM IST (Updated: 4 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
பட்டாசு ஆலை 
விருதுநகர் அருகே கோட்டூர்-பொம்மையாபுரம் சாலையில் சிவகாசியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு நேற்று மதியம் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்தது. 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
அப்போது மூலப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே சருகு இலைகளை தீ வைத்துக் கொளுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தநேரத்தில் பெண் ஒருவர் அந்த அறையைத் திறந்த போது வெப்பத்தின் காரணமாக அறைக்குள் இருந்த மூலப்பொருட்கள் மற்றும் பட்டாசுகளில் தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. 
3 பேர் படுகாயம் 
இதில் கூத்திப்பாறையை சேர்ந்த குணவதி(வயது 46), பொன் என்ற பொன்னம்மாள்(46) மற்றும் மலைப்பட்டியைச் சேர்ந்த பேபி(58) ஆகிய 3 பெண் தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக பேபி திருத்தங்கல் தனியார் ஆஸ்பத்திரிக்கும், மற்ற இருவரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் தீயணைப்பு படையினர் வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  இந்த வெடிவிபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story