விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 March 2022 12:22 AM IST (Updated: 4 March 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அருகே பாலூர் சாலையோரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு அனுமதியின்றி கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை அக்கட்சி நிர்வாகிகள் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, அந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டு காணாமல் போய் இருந்தது. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து பாலூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

 தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சபியுல்லா, கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர்கள் அசோகன், குருமூர்த்தி மற்றும் போலீசாரும் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பகுதியில் பல்வேறு கட்சி கொடிக்கம்பங்கள் உள்ளது. ஆனால் நாங்கள் புதிதாக கொடிக்கம்பம் வைப்பதற்கு மட்டும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதி வழங்குவதில்லை.  மேலும் புதிதாக வைத்த கொடிக்கம்பத்தை மட்டும் யாரோ அகற்றி சென்று விட்டனர். 

வாக்குவாதம்

ஆகவே திருடிச்சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் புதிய கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி அளிக்கவில்லை என்றால் இந்த பகுதியில் உள்ள பிற கட்சி கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதை கேட்ட அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தி கொடிக்கம்பம் மீண்டும் உங்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடன்படாமல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர். அப்போது போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கைது

இதற்கிடையில் கடலூர் மற்றும் பண்ருட்டி பகுதியில் இருந்து மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வாகனத்தில் வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சுமார் 70-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து பண்ருட்டியில் உள்ள தனியார் இடத்தில் அடைத்தனர்.

பரபரப்பு

இதன் காரணமாக கடலூர் - பாலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவத்தையொட்டி அந்த பகுதியில் காலை 11 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன, இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story