கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல்; பசவராஜ் பொம்மை தாக்கல் செய்கிறார்
2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் புதிய திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு: 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் புதிய திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக பட்ஜெட்
கர்நாடகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியின் தலைமை மாற்றம் நடைபெற்றது. வயது மூப்பு காரணமாக எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பெங்களூரு விதான சவுதாவில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12.30 மணிக்கு 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய இருக்கிறார்.
கர்நாடகத்தின் பட்ஜெட் அளவு ரூ.2½ லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர்ப்பாசனம், பொதுப்பணி, கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ், சமூக நலன் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களை கவரும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
7-வது ஊதிய குழு
பெங்களூரு மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பெங்களூருவின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசின் வரி வருவாயை பெருக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.
மேலும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசு மேலும் கடன் வாங்க உள்ளது. இதனால் கர்நாடக அரசின் மொத்த கடன் ரூ.5 லட்சம் கோடியை நெருங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழு அமைப்பது, பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிப்பது, இந்து மடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story