‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டன
சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி- பி.நாட்டாமங்கலம் செல்லும் வழியில் மின் கம்பங்கள் சாய்வாக மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தன என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பங்களை சரிசெய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-ஊர்மக்கள், அமானி கொண்டலாம்பட்டி, சேலம்.
==
தார்சாலை அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா அடுத்த கரட்டூர் இ.எஸ்.ஐ. பகுதியில் சாலை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மண் சாலை என்பதால் மழைக்காலங்களில் அந்த பகுதியில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைக்க முன் வர வேண்டும்.
-ஊர்மக்கள், கரட்டூர், சேலம்.
==
போக்குவரத்து பாதிப்பு
சேலம் 4 ரோடு பெரமனூர் நாராயணபிள்ளை தெருவில் சாலையின் நடுவே பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. தற்போது அந்த குழியால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு இந்த குழி தோண்டப்பட்டுள்ளதால் அங்கு வரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் தோண்டப்பட்ட குழியை மூட வேண்டும்.
-ஹரிஷ், சேலம்.
==
சாலையின் நடுவே பள்ளம்
சேலம் அண்ணா பூங்காவில் இருந்து சங்கர் நகர் செல்லும் சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், சங்கர், சேலம்.
==
பஸ்கள் நின்று செல்லுமா?
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் ஒரு சில பஸ்கள் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் வெகு தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட பகுதிகளில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், எடப்பாடி, சேலம்.
==
பயன்படாத ஏ.டி.எம். மையங்கள்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் உள்ள பகுதி மற்றும் வெளிப்புற பகுதியிலும் போதுமான ஏ.டி.எம். மையங்கள் இல்லை. பஸ் நிலைய வெளிப்புற பகுதியில் மிக குறைந்த ஏ.டி.எம். மையங்களே செயல்படுகின்றன. அதிலும் பெரும்பாலும் பணம் இருப்பது இல்லை. இதனால் இந்த ஏ.டி.எம். மையங்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் வெளியூர் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், கிருஷ்ணகிரி.
==
எரியாத உயர்மின் கோபுர விளக்குகள்
பர்கூர், ஜெகதேவி, அச்சமங்கலம், கொண்டநாயனப்பள்ளி ஆகிய ஊர்களின் சாலைகள் சந்திக்கும் சந்திப்பு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. சில மாதங்களாக இது எரியாமல் உள்ளது. இதனால் நான்கு சாலை இணைப்பு பகுதியில் எப்போதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே எரியாத உயர்மின் கோபுர விளக்குகளை எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பர்கூர்.
Related Tags :
Next Story