தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 March 2022 2:45 AM IST (Updated: 4 March 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பாவனகோட்டை அருகே விஜயாபுரம் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தின் ேமல் பகுதி உடைந்து தொங்குகிறது. அது எப்போது விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பாக ஆபத்தான இந்த மின்கம்பத்தை மின்வாரியத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும்.
கார்த்திக், தேவகோட்டை.
குடிநீர் தட்டுப்பாடு
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு செக்கடி தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிக்க போதிய தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள். பல கிலோமீட்டர் சென்று குடிநீரை மக்கள் எடுக்கிறார்கள். சிலர் நீரை காசு கொடுத்தும் வாங்குகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சரத் ஜான்சன், ஆரப்பாளையம்.
மயான வசதி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் அருகே ஆலமரத்துப்பட்டி ரோடு பொியார் காலனி பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் பொது மயான வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய சிரமமாக உள்ளது. எனவே இங்கு மயானம் அமைக்க வேண்டும்.
செல்வா, திருத்தங்கல்.
தேங்கிய கழிவுநீர்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 92-வது  மாநகராட்சி காலனி 2-வது பிளாக்கில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரானது நிரம்பி வழிந்து அங்குள்ள சாலையில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகிறார்கள். இப்பகுதியில் சுகாதார சீர்கேடு அடைந்து தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
வினோ, அவனியாபுரம்.
சிக்னல் சரிசெய்யப்படுமா?
மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதி சந்திப்பு மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. இப்பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல் பழுது காரணமாக இயங்கப்படவில்லை. இதனால் இங்கு தினமும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இந்த சிக்னலை போக்குவரத்துதுறை அதிகாரிகள் சரிசெய்வார்களா?
பொதுமக்கள், தெற்குவாசல்.
நிழற்குடை தேவை
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். கோடை காலம் வருவதால் வெயிலில் நிற்பதால் வயதானோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.
சிவா, மதுரை.

Next Story