ஏற்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் காட்டெருமை தாக்கி பலி


ஏற்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் காட்டெருமை தாக்கி பலி
x
தினத்தந்தி 4 March 2022 2:57 AM IST (Updated: 4 March 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு அருகே காட்டெருமை தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

ஏற்காடு:
ஏற்காடு அருகே காட்டெருமை தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தனியார் நிறுவன ஊழியர்
ஏற்காடு அருகே உள்ள செந்திட்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் கிருபாகரன் (வயது 23). இவர் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் வேலைக்கு கிருபாகரன், தனது தந்தை கோவிந்தனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஏற்காடு அருகே உள்ள கொட்டச்சேடு வழியாக குப்பனூர்- சேலம் மலைப்பாதையில் முனியப்பன் கோவில் அருகே அவர்கள் ெசன்று கொண்டிருந்தனர். 
காட்டெருமை தாக்கியது
அப்போது எதிர்பாராதவிதமாக காட்டெருமை ஒன்று திடீரென்று சாலையின் குறுக்கே வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோவிந்தன் நிலைதடுமாறி காட்டெருமையின் மீது மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கோவிந்தன், கிருபாகரன் ஆகியோர் கீழே விழுந்தனர். 
மேலும் மோதிய வேகத்தில் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளுடன் கோவிந்தன் இழுத்துச்செல்லப்பட்டார். ஆனால் காட்டெருமையிடம் கிருபாகரன் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றது.
எம்.எல்.ஏ. ஆறுதல்
இது குறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து, கிருபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மேலும் காட்டெருமை தாக்கி பலியான கிருபாகரனின் குடும்பத்தினருக்கு சித்ரா எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல் கூறினார்.
தனியார் நிறுவன ஊழியர் காட்டெருமை தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story