கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 19 நாட்கள் நடக்கிறது


கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 19 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 4 March 2022 3:14 AM IST (Updated: 4 March 2022 3:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 19 நாட்கள் நடக்கிறது.

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 19 நாட்கள் நடக்கிறது.

தர்ணா போராட்டம்

கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் உரையாற்றினார். தேசிய கொடியை மந்திரி ஈசுவரப்பா அவமதித்துவிட்டதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் சட்டசபை கூட்டம் முடங்கியது. இதன்காரணமாக கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு முன்னதாகவே நிறைவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. இதில் முதல் நாளான இன்று, 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து சட்டசபை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. வழக்கமான கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்து கொள்ளப்படும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மொத்தம் 19 நாட்கள் நடக்கிறது.

பல்வேறு பிரச்சினைகள்

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதாவது உக்ரைனில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்பது, அங்கு ரஷியாவின் தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலை கொண்டுவருவது குறித்து பிரச்சினையை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நவீன் உடலை விரைவாக கொண்டுவர அரசு தீவிர முயற்சி செய்யும்படி வலியுறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

சிவமொக்காவில் பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா என்பவர் கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சிவமொக்காவில் வன்முறை ஏற்பட்டது. இதுகுறித்தும் பிரச்சினையை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேகதாது திட்ட பணிகளை தொடங்க வலியுறுத்தி காங்கிரஸ் பாதயாத்திரை மேற்கொண்டது. அந்த பாதயாத்திரை நேற்று நிறைவடைந்தது.

பரபரப்பான சூழ்நிலை

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக அதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு அக்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூட்டம் கூடி நிகழ்ச்சிகளை நடத்தும் பா.ஜனதா தலைவர்கள் மீது மட்டும் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்தும் சட்டசபை கூட்டத்தொடரில் பிரச்சினை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரியை வலியுறுத்தி வருகிறார்கள். இத்தகைய பிரச்சினைகளுக்கு இடையே பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story