ஏற்காடு மலைப்பகுதியில் திடீர் காட்டுத்தீ-அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராட்டம்
ஏற்காடு மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீப்பற்றி பரவியது. அதை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் இருந்து சேர்வராயன் கோவிலுக்கு செல்லும் வழியில் வெட்டுவான் மலை என்ற பகுதி உள்ளது. சுமார் 182 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதியில் ஏராளமான அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் வன உயிரினங்கள் காணப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் ஏற்காடு வெட்டுவான் மலை வனப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது. மேலும் காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் செடி, கொடிகள், மரங்கள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தன.
இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் ஏற்காடு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினார்கள். நேற்று இரவு வரை போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் 10 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பில் உள்ள செடி, ெகாடிகள் மற்றும் மரங்கள் கருகி இருக்கலாம் என தெரிகிறது. மேலும் அங்கு இருந்த வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து இ்ன்றும் (வெள்ளிக்கிழமை) காட்டுத்தீ தொடர்ந்து எரிந்தால் அதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story