சத்தியமங்கலத்தில் லாரி டிரைவரிடம் லஞ்ச பேரம் பேசும் 2 போலீஸ்காரர்கள்- வீடியோ வெளியானதால் ஆயுதப்படைக்கு மாற்றம்


சத்தியமங்கலத்தில் லாரி டிரைவரிடம் லஞ்ச பேரம் பேசும் 2 போலீஸ்காரர்கள்- வீடியோ வெளியானதால் ஆயுதப்படைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 4 March 2022 3:56 AM IST (Updated: 4 March 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் லாரி டிரைவரிடம் லஞ்ச பேரம் பேசும் 2 போலீஸ்காரர்களின் வீடியோ வெளியானதால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

சத்தியமங்கலம்
 சத்தியமங்கலத்தில் லாரி டிரைவரிடம் லஞ்ச பேரம் பேசும் 2 போலீஸ்காரர்களின் வீடியோ வெளியானதால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
லாரி டிரைவர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலம் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி கர்நாடகாவில் இருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் லாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஜீப்பில் இருந்தபடியே போலீசார் லாரி டிரைவரிடம் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிப்பார்த்தனர்.
லஞ்சம் கேட்கும்   போலீஸ்காரர்கள்
அதைத்தொடர்ந்து போலீசார் டிரைவரிடம், லஞ்சம் கேட்டுள்ளனர். அதற்கு டிரைவர், என்னிடம் பணம் இல்லை. ரூ.50 மட்டுமே உள்ளது என மணிபர்சை திறந்து காட்டியபடி, வேண்டுமானால் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் போலீசார் சிறிய வாகன டிரைவர்கள் 100 ரூபாய் தருகிறார்கள். நீ 50 ரூபாய் கொடுத்தால் எப்படி? உன் மீது வழக்கு போடட்டுமா? 200 ரூபாய் கொடுத்து விட்டு போ எனக் கூறியுள்ளனர்.
ஆனால் டிரைவர் தினமும் 50 ரூபாய்தான் கொடுத்து செல்கிறேன். நீங்கள் அரசு சம்பளம் ரூ.50 ஆயிரம் வாங்குகிறீர்கள் என்னிடம் 200 ரூபாய் கேட்பது நியாயமா? வாங்கிக் கொள்ளுங்கள் என கெஞ்சியுள்ளார். உடனே போலீசார் சரி 200 ரூபாய் தரவில்லையென்றால் பரவாயில்லை 100 ரூபாய் கொடுத்துவிட்டு செல் என்று கூறியுள்ளனர். இதனால் லாரி டிரைவர் 100 ரூபாயை கொடுத்துவிட்டு சாபம் விட்டபடி அங்கிருந்து லாரியில் சென்றார். அதன்பின்னர் போலீஸ் ஜீப்பும் அங்கிருந்து சென்றது.
ஆயுதப்படைக்கு மாற்றம்
இதனை அருகில் நின்றிருந்த ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளத்தில் வைரலானது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜீப்பில் வந்த போலீஸ்காரர்கள் பங்களாப்புதூர் போலீஸ் நிலைய தலைமை காவலர் செல்வகுமார், தாளவாடி போலீஸ் நிலைய போலீஸ்காரர் கந்தசாமி ஆகியோர் என்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் சூப்பிரண்டு ஈரோடு ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் விசாரணை நடத்தி  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் பேரிலும் 2 போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
லாரி டிரைவரை போலீஸ்காரர்கள் மிரட்டி லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story