காரில் கொண்டு செல்லப்பட்ட நட்சத்திர ஆமை பறிமுதல்
ஆரல்வாய்மொழியில் காரில் கொண்டு செல்லப்பட்ட நட்சத்திர ஆமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு வீரரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் காரில் கொண்டு செல்லப்பட்ட நட்சத்திர ஆமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு வீரரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நட்சத்திர ஆமை
ஆரல்வாய்மொழி வழியாக காரில் நட்சத்திர ஆமை கடத்தி செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வன காப்பாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் சோதனை சாவடி அருகே நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்தபோது அதில் அரிய வகை நட்சத்திர ஆமை இருந்தது தெரிய வந்தது.
பறிமுதல்
பின்னர் அந்த நட்சத்திர ஆமையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் காவல் கிணறு பகுதியில் உள்ள இஸ்ரோவில் பணிபுரியும் திருவனந்தபுரத்தை சேர்ந்த மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு வீரர் சுரேஷ் (வயது 52) என்பதும், அவர் குடும்பத்துடன் ஊருக்கு செல்வதும் தெரிய வந்தது.
விசாரணை
அப்போது அவர் வனத்துறையினரிடம் கூறுகையில், ஆமையை சாலையில் கிடந்து எடுத்ததாகவும், அதை நாகர்கோவில் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க சென்ற போது நீங்கள் சோதனை நடத்தியதில் சிக்கியதாகவும் என கூறியுள்ளார்.
ஆனால் ஆமை பறிமுதல் விவகாரத்தில் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே உண்மையிலேயே நட்சத்திர ஆமை அவருக்கு எப்படி கிடைத்தது? கடத்தி கொண்டு வரப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.