தாம்பரத்தின் முதல் மேயராகும் பெண் என்ஜினீயர்


தாம்பரத்தின் முதல் மேயராகும் பெண் என்ஜினீயர்
x
தினத்தந்தி 4 March 2022 5:57 AM IST (Updated: 4 March 2022 5:57 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக பெண் என்ஜினீயர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

தாம்பரம்,

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 54 வார்டுகளை கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணி 9 வார்டுகளிலும், சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர். மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி, பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த பட்டியலின பெண் கவுன்சிலர்கள் மத்தியில் மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

மேயராகும் பெண் என்ஜினீயர்

இந்தநிலையில் 32-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமாரியை மேயர் வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. 25 வயதாகும் வசந்தகுமாரி, பி.டெக் கெமிக்கல் என்ஜினீயர் ஆவார். இவர், தாம்பரம் பழைய 1-வது வார்டு தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

இவருடைய தந்தை கமலக்கண்ணன், 35 ஆண்டுகளாக தி.மு.க.வில் உள்ளார். தொண்டரணி, இளைஞர் அணி பதவிகளை வகித்து வந்த அவர், கடந்த 15 ஆண்டுகளாக தாம்பரம் நகர 1-வது வட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார்.

இவருடைய கணவர் கோகுல செல்வன். மேற்கு தாம்பரம் கடப்பேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் தாம்பரம் நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை மேயர்

அதேபோல் தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் மைத்துனர்(சகோதரியின் மகன்) ஜி.காமராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். 61 வயதாகும் காமராஜ், கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். காமராஜ், 2001 முதல் 2006 வரை திருநீர்மலை பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து உள்ளார். காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரான அவருடைய மனைவி கலைவாணி, 2011 முதல் 2016 வரை திருநீர்மலை பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வந்தார். காமராஜ், குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

Next Story