3 பேர் சமநிலை வாக்குகள் பெற்றதால் பரபரப்பு
3 பேர் சமநிலை வாக்குகள் பெற்றதால் பரபரப்பு
அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு 6-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி போட்டியிடுவார் என தி.மு.க. தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று காலை முறைமுக தேர்தல் பேரூராட்சி மன்ற கூட்ட அறையில் நடந்தது. செயல் அலுவலர் ஆனந்தன் தேர்தலை நடத்தினார். தி.மு.க. சார்பில் தனலட்சுமி வேட்பு மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க. சார்பில் 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து 7வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சசிகலாவும் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் காரணமாக மறைமுக வாக்கெடுப்பு நடந்தது.
தலா 6 ஓட்டுகள்
இறுதியில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 3 பேரும் தலா 6 வாக்குகள் பெற்றனர். இதனால் யார் வெற்றி பெற்றார் என்பதை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் விதிப்படி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவரை தேர்வு செய்ய வேண்டும் என்று செயல் அலுவலர் ஆனந்தன் தெரிவித்தார். ஆனால் 1வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சிவப்பிரகாஷ் தி.மு.க 12 வாக்குகள் பெற்றதால் தலைமை கழகம் அறிவித்த நபர்தான் வெற்றிபெற்றார் என்று அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தேர்தல் விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார். இதனால் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 2 பேர் வெளியே சென்று விட்டனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 7 பேர் மட்டும் கூட்ட அரங்கில் காத்திருந்தனர். இதற்கிடையே, பேரூராட்சி அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நீண்ட நேரமாக எந்த அறிவிப்பும் இல்லாமல் நாங்கள் காத்திருக்கிறோம். செயல் அலுவலர் வெளியே வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செயல் அலுவலர் வந்து தேர்தல் ஆணையத்தின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தகவல் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தலைவராக தனலட்சுமி வெற்றி
இதையடுத்து மாலை 3.30 மணிக்கு தி.மு.க. வேட்பாளர் தனலட்சுமி, அ.தி.மு.க. வேட்பாளர் சித்ரா மற்றும் தி.மு.க. போட்டி வேட்பாளர் சசிகலா ஆகியோர் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி அதை ஒரு குடத்தில் போட்டனர். பேரூராட்சி அலுவலர்கள் அல்லாத தனி நபர் ஒருவர் குடத்தில் இருந்து 2 சீட்டுகளை எடுத்தார். அந்த 2 சீட்ைட பிரித்து பார்த்தபோது அதில் தனலட்சுமி மற்றும் சித்ரா பெயர்கள் இருந்தன.
இதையடுத்து இவர்கள் 2 பேருக்கும் தனியாக மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தனலட்சுமி 10 வாக்குகளும், சித்ரா 8 வாக்குகளும் பெற்றனர். இதனால் தி.மு.க. தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் தனலட்சுமியே அவினாசி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
----
Related Tags :
Next Story