காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது


காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 4 March 2022 9:05 PM IST (Updated: 4 March 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

தேனி:
காங்கிரசுக்கு ஒதுக்கீடு
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 19 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ், அ.ம.மு.க. தலா 2 இடங்களிலும், பா.ஜ.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தி.மு.க. கூட்டணியில் இந்த நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி தலைவர் வேட்பாளராக 22-வது வார்டு கவுன்சிலர் சற்குணம் அறிவிக்கப்பட்டார்.
நேற்று காலையில் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவியை தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் உள்பட 27 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் பங்கேற்கவில்லை.
தி.மு.க. மனு தாக்கல்
நகராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் அறிவித்தார். அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் முன்பே 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரேணுப்பிரியா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதை அறிந்த காங்கிரஸ் வேட்பாளர் சற்குணம் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர், சற்குணம் மனுதாக்கல் செய்ய முயன்ற போது அவருக்கு மற்றொரு காங்கிரஸ் கவுன்சிலர் நாகராஜ் முன்மொழிய வந்தார். வழிமொழிய மற்றொரு கவுன்சிலர் தேவைப்பட்டது. அப்போது சுயேச்சை கவுன்சிலர் சுப்புலட்சுமி வழிமொழிய முன்வந்தார். 
இதையடுத்து கூட்டரங்கில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் வேட்பாளர் சற்குணம், தலைவர் பதவிக்கு தி.மு.க. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய மீண்டும் வந்த போது மனு தாக்கலுக்கான நேரம் முடிந்துவிட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
சாலைமறியல்
இதனால், காங்கிரஸ் வேட்பாளர் சற்குணம் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது தி.மு.க.வை சேர்ந்த ரேணுப்பிரியா போட்டியின்றி நகராட்சி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க. கவுன்சிலருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
கூட்டணி தர்மத்தை மீறி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறி அவர்கள் திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்து கொண்டு இருந்த போது அங்கு திரண்டு நின்ற தி.மு.க.வினர் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரேணுப்பிரியாவை வாழ்த்தியும், தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளர் சற்குணத்திடம் நிருபர்கள் கேட்ட போது அவர் சோகமாக இருந்ததால் பதில் அளிக்கவில்லை. பின்னர், அவருடைய மகன் டாக்டர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், "இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தான் நாங்கள் மனு தாக்கல் செய்ய வந்தோம். ஆனால் ஏமாற்றப்பட்டுள்ளோம். இது தொடர்பாக எங்களது கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு தகவல் கொடுத்துள்ளோம்" என்றார்.
கொண்டாட்டம்
பின்னர் நகராட்சி தலைவராக ரேணுப்பிரியா பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு முடிந்தவுடன் ரேணுப்பிரியா மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை விட்டு மொத்தமாக வெளியே வந்தனர். அவர்களுக்கு கட்சியினர் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். 

அப்போது ரேணுப்பிரியாவின் கணவரும், தேனி நகர தி.மு.க. பொறுப்பாளருமான பாலமுருகனை தி.மு.க.வினர் தோளில் தூக்கி வைத்து வாழ்த்து கோஷமிட்டனர். இதில் பாலமுருகன் 20-வது வார்டு கவுன்சிலர் ஆவார்.
இந்த வெற்றியை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ரேணுப்பிரியா மற்றும் கவுன்சிலர்கள் அங்கிருந்து சிறிது தூரம் பெரியகுளம் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்களுக்கு முன்பு மேளதாளம் முழங்க தி.மு.க.வினர் ஆடிப்பாடி உற்சாகத்துடன் சென்றனர்.
==============
இன்சைடு பாக்ஸ்
------------------
தேனி அல்லிநகரம் நகராட்சியில்
முதல் பெண் தலைவர் ரேணுப்பிரியா
------
தேனி அல்லிநகரம் நகராட்சியில் இதுவரை தலைவர் பதவி வகித்த அனைவரும் ஆண்கள். இந்த தடவை முதல் முறையாக நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது தலைவராக ரேணுப்பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளதால், நகராட்சியின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். அதுபோல், இந்த நகராட்சி தலைவராக இதுவரை தி.மு.க.வை சேர்ந்த யாரும் தேர்வு செய்யப்பட்டதில்லை. நகராட்சி தலைவர் அரியணையில் தி.மு.க.வை சேர்ந்தவர் அமர வேண்டும் என்ற கனவு தி.மு.க.வினர் மத்தியில் இருந்தது. அந்த கனவு தற்போது நனவாகி உள்ளது. இது தி.மு.க.வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
=======
ஊராட்சி பதவியை உதறிய ரேணுப்பிரியா
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேணுப்பிரியா, வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், அவர் நகராட்சியில் போட்டியிட திட்டமிட்டார். இதற்காக கடந்த ஜனவரி மாதம் அவர் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், 10-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தி.மு.க.வினர் ஆதரவோடு நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
===========
கூட்டணி தர்மத்தை மீறியதால்
 மறுதேர்தல் நடத்த வேண்டும்
காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேட்டி
------
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு தி.மு.க. கவுன்சிலர் ரேணுப்பிரியா வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைமைக்கழகம் ஒதுக்கியது. கூட்டணி தர்மத்தை மீறி தி.மு.க. கவுன்சிலர் வேட்பு மனு தாக்கல் செய்ததுடன், காங்கிரஸ் வேட்பாளரை மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி தர்மத்தை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர், நகர பொறுப்பாளர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் சென்னைக்கு சென்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.ஸ்.அழகிரியை சந்திக்க உள்ளோம். 

பின்னர் மாநில தலைவர் மூலமாக முதல்-அமைச்சரை சந்தித்து புகார் கொடுக்க உள்ளோம். இதுதொடர்பாக மாநில தலைவருக்கும், அகில இந்திய தலைமைக்கும் தகவல் கொடுத்துள்ளோம். தற்போது தேர்வு செய்யப்பட்ட நகராட்சி தலைவரை டிஸ்மிஸ் செய்து விட்டு, காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இங்கு தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story