துணைத்தலைவராக தேர்வான சுயேச்சை கவுன்சிலர் சாலை மறியல்


துணைத்தலைவராக தேர்வான சுயேச்சை கவுன்சிலர் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 March 2022 10:05 PM IST (Updated: 4 March 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட வெற்றி அறிவிப்பை வெளியிட தாமதமானதால் சுயேச்சை கவுன்சிலர் சாலை மறியலில் ஈடுபட்டார்.

குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை
திண்டுக்கல் மாவட்டம் பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், 7 வார்டுகளில் தி.மு.க.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. தலா ஒரு வார்டிலும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றது. 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றனர்.

 இந்தநிலையில் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பழனிசாமி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 
அதன்பிறகு மதியம் 2.30 மணி அளவில் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க. கூட்டணியில் துணைத்தலைவர் பதவி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் 4-வது வார்டு ம.தி.மு.க. கவுன்சிலர் லதா துணைத்தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 13-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் கதிரவனும், துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

 இதையடுத்து மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 15 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பின்னர் முடிவுகள் எண்ணப்பட்டபோது, சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் 10 வாக்குகளும், ம.தி.மு.க. கவுன்சிலர் லதா 5 வாக்குகளும் பெற்றனர். ஆனால் வெற்றி அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பேரூராட்சி அலுவலக வளாகத்திற்கு வெளியே இருதரப்பினருக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது. 
சாலை மறியல்
பின்னர் கவுன்சிலர் கூட்டத்தை கூட்டிய பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமி, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு மறுதேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சுயேச்சை கவுன்சிலர் கதிரவன், செயல் அலுவலர் ராஜலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மேலும் வெற்றி அறிவிப்பை வெளியிடக்கோரி கதிரவன், தனது ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு திண்டுக்கல்-கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கதிரவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் மறியலை கைவிடவில்லை. 

இதற்கிடையே செயல் அலுவலர் ராஜலட்சுமி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் பாளையம் பேரூராட்சி துணைத்தலைவராக 13-வது வார்டு கவுன்சிலர் கதிரவன் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து கதிரவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story