தி.மு.க.போட்டி வேட்பாளரின் கணவர் தற்கொலை முயற்சி


தி.மு.க.போட்டி வேட்பாளரின் கணவர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 4 March 2022 11:54 PM IST (Updated: 4 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரின் கணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு தி.மு.க.சார்பில் 20-வது வார்டு கவுன்சிலர் சுந்தரி, 2-வது வார்டு கவுன்சிலர் கீதா ஆகிய 2 பேரும் சீட் கேட்டு கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையில் கட்சி தலைமை மாநகராட்சி அதிகாரபூர்வ மேயர் வேட்பாளராக சுந்தரியை அறிவித்தது.
இதனால் கீதா, அவரது கணவர் குணசேகரன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை மேயர் பதவிக்கான வேட்பு மனு தாக்கலின் போது, சுந்தரியை எதிர்த்து கீதா வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலின் முடிவில் கீதா தோல்வி அடைந்தார். அதற்கு முன்பாக தனது மனைவிக்கு மேயர் சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த குணசேகரன் நேற்று காலை அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

சாலை மறியல்

இதை அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு  டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இது பற்றி அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அரசு ஆஸ்பத் திரி எதிரே கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாவட்ட தி.மு.க.வை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர்  அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story