தலைஞாயிறு பேரூராட்சி தலைவர், துணை தலைவராக அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி


தலைஞாயிறு பேரூராட்சி தலைவர், துணை தலைவராக அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி
x
தினத்தந்தி 5 March 2022 12:28 AM IST (Updated: 5 March 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு பேரூராட்சி தலைவர், துணை தலைவராக அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலை புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாய்மேடு:
தலைஞாயிறு பேரூராட்சி தலைவர், துணை தலைவராக அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலை புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள், போலீசாருடன் வாக்குவாததத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சி
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 8 இடங்களிலும், தி.மு.க. 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனைத்தொடர்ந்து தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். 
அப்போது தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
தி.முக. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு சுகுமாரன், வேதாரண்யம் துணை சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கன்னிகா, செந்தில்குமார், மலர்க்கொடி, நாகலட்சுமி, சுப்ரியா உள்ளிட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தலைவர் தேர்தல் நடந்தபோது வாக்குச்சீட்டை 2 தி.மு.க. கவுன்சிலர்கள் கசக்கி எறிந்து விட்டனர் இதனால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் 2-வது முறையாக தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கதிரவன் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

Next Story