டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வெற்றி ரத்து
டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வெற்றி ரத்து செய்யப்பட்டது.
பேரையூர்,
சென்னை ஐகோர்ட்டில், மதுரை மாவட்டம் டி.கல்லுப் பட்டியை சேர்ந்த பழனிசெல்வி என்பவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி தொடர்பாக மனுதாக்கல் செய்தார். அந்தமனுவில், டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் 10-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டேன். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், நானும் தலா 284 வாக்குகள் பெற்றோம். இதனால் குலுக்கல் முறையில் நடந்த தேர்தலில் முதலில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பின்னர் திடீரென தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி முகமது ரபிக் அறிவித்தார். இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது என கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு குலுக்கல் முறையில் நடந்த தேர்தலின்போது பதிவான வீடியோ பதிவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் சார்பில் வீடியோ பதிவு தாக்கல் செய்யப்பட்டது. அதைப்பார்த்த நீதிபதிகள், மனுதாரர் பழனி செல்வியை தான் வெற்றி பெற்றவராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். எனவே தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது ரபிக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்திருந்தனர்.
இதையடுத்து டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது ரபிக் மீது துறை ரீதியான நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது. தொடர்ந்து டி. கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலராக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆஷிக் நியமனம் செய்யப்பட்டார். இதை அடுத்து 10-வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட சுப்புலட்சுமி வெற்றி ரத்து செய்யப்பட்டு அதற்கான உத்தரவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆஷிக் மேற்கொண்டார். இந்த உத்தரவை சுப்புலட்சுமி ஏற்க மறுத்ததால் அவரது வீட்டு சுவரில் ஓட்டினர். மேலும் சுயேச்சை வேட்பாளர் பழனிசெல்விக்கு 10-வது வார்டு கவுன்சிலர் சான்றிதழை ஆஷிக் வழங்கினார். நேற்று காலை 10-வது வார்டு கவுன்சிலராக பழனி செல்வி பேரூராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Related Tags :
Next Story