ராமேசுவரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி போட்டியின்றி தேர்வு
ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மறைமுக தேர்தலில் தி.மு.க.வேட்பாளர்களான நகரசபை தலைவராக நாசர்கானும் துணைத்தலைவராக தட்சிணாமூர்த்தியும் ேபாட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மறைமுக தேர்தலில் தி.மு.க.வேட்பாளர்களான நகரசபை தலைவராக நாசர்கானும் துணைத்தலைவராக தட்சிணாமூர்த்தியும் ேபாட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் கடந்த மாதம் 19-ந்தேதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதுபோல் இந்த உள்ளாட்சி் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22-ந்தேதி அன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க 11 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தையும், அ.தி.மு.க 6 இடங்களிலும், சுயேச்சை 3 இடங்களையும் பிடித்தது. அதுபோல் அ.தி.மு.க கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 3 பேரும் தி.மு.க.வில் இணைந்து கொண்டனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதற்காக 18 கவுன்சிலர்கள் நேற்று ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். நகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த மறைமுக தேர்தலில் ராமேசுவரம் நகரசபை தலைவராக தி.மு.க. வேட்பாளர் நாசர்கான் கவுன்சிலர்கள் மூலம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நகரசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாசர்கானுக்கு நகராட்சி ஆணையாளர் மூர்த்தி தலைவர் பதவிக்கான வெற்றி சான்றிதழையும் வழங்கி பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். அப்போது நகராட்சி பொறியாளர் சக்திவேல், மேலாளர் தியாகராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து
நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாசர்கான் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க கட்சியின் மாவட்ட செயலாளருமான காதர்பாட்சாமுத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி ஆகியோரிடம் வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார். அப்போது அலுவலக வாசலில் கூடியிருந்த தி.மு.க கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் நகராட்சி தலைவர் நாசர்கானுக்கு பொன்னாடை அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
துணைத்தலைவர் தேர்வு
தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி அளவில் நகரசபை துணைத்தலைவர் பதவிக்காக மறைமுக தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் நகராட்சி துணைத்தலைவராக 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கவுன்சிலர்கள் மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் மூர்த்தி வெற்றி சான்றிதழை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
நகரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பங்கேற்க வில்லை. நகராட்சி அலுவலக வாசல் கதவுகளை மூடியபடி ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நகரசபை தலைவராக நாசர் கான் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நகரின் பல இடங்களிலும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
Related Tags :
Next Story